கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலதரப்பட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாததால், கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் ஆட்டோ தொழிலாளர்கள் அரசிடம் ஒரு தீர்வை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அம்மனுவில், "வாழ்வாதாரம் இழந்துள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு 7,500 ரூபாயை அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன இயக்கத்திற்கான தகுதிச் சான்று உள்ளிட்டவற்றுக்கான தேதியை நீட்டித்து, அதற்கான செலவினங்களை அரசு ஏற்கவேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
"மனுவில் குறிப்பிட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள், போராட்டங்களை நடத்தும் முன்பே அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என சேலம் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கச் செயலாளர் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும்; தகுந்த இடைவெளியைப் பின்பற்றி ஆட்டோ இயங்குவதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெர்மிட் அடிப்படையில் நிவாரணத்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின்பு, மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: சேலத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்!