புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்பகுதியில் சுமார் 34.9 அடி உயரமுள்ள ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை உள்ளது. இக்கோயில் 1574-ல் செந்தமிழ்ப்புலவரால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு வருடமும் மாசி மகம் பௌர்ணமியை முன்னிட்டு இரண்டு நாட்கள் வெகுவிமர்சியாக திருவிழா நடைபெறும். இந்த வருடத்திற்கான மாசிமகத்திருவிழா இன்று துவங்கியது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கோயில் முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட குதிரை சிலைக்கு, அதன் உயரத்திற்கு ஏற்ப காகிதப்பூ மாலை பக்தர்களால் நேர்த்திக்கடனாக அணிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், அந்தப் பகுதியில் இன்று உள்ளுர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோயிவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்தவந்த பக்தர்கள் கார், லாரி போன்ற வாகனங்களின் மூலம் மலர், காகிதப்பூ மாலைகளை எடுத்துவந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்தும் திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, வேலூர், சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர், அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.