சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசின் மகள் திருமணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏடிஆர் திருமண மஹாலில் நடைபெற்றது. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைசெயலாளர் அரசகுமார், "எங்களுக்கெல்லாம் அரசியல் பாடம் சொல்லித் தந்தவர் திமுக தலைவர். வருங்கால முதலமைச்சர் என்று தளபதி ஸ்டாலினை அருவருப்பாக அழைக்க வேண்டாம்.
அவர் எப்போதுமே முதலமைச்சர்தான். முதலமைச்சர் அரியணையில் விரைவில் அவர் அமர்வார். அதை காண நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். நான் பாஜகவில் இருந்தாலும் எனது தாய் வீடு திமுக தான். ஸ்டாலினின் பேனரைக் கூட பொதுமக்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். அவர்களது பார்வையால் ஸ்டாலின் விரைவில் முதலமைச்சர் அரியாசனத்தில் அமர்வார் என்ற உறுதியை தெரிவிக்கிறது.
நான் அரசியலுக்காக சொல்லவில்லை. இறைவன் மீது ஆணையாக தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் ஸ்டாலின்தான்" என்றார். இந்த பேச்சு அங்கிருந்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.