புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள எரிச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நாள்தோறும் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனை சீர்படுத்த எண்ணிய அப்பகுதி இளைஞர்கள், ரூபாய் ஐந்து லட்சத்து 29 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்துவருகின்றனர்.
உள்ளூர் இளைஞர்கள் சார்பில் வாட்ஸ்ஆப் குழு அமைத்து வெளிநாடுகளில் தங்கி வேலை செய்து வரும் இளைஞர்களிடம் நிதி திரட்டி அப்பகுதியிலுள்ள சிவன் கோயில் அருகே பொது இடத்தில் 500 அடியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்தக் கிணற்றிருந்து அதிவேக திறனுள்ள நீர் மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியில் குடிநீர் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
மேலும், இனிவரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்க மக்கள் தொடர்ந்து அப்பகுதிகளில் மரங்களை நட்டுவருகின்றனர். இளைஞர்களின் இச்செயல்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.