புதுக்கோட்டை: நகர் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த டிஇஎல்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 1967ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த 42 முன்னாள் மாணவர்கள், நகர்ப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு, சந்தித்துக் கொண்டனர்.
சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பழைய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களது பழைய நண்பர்களை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்து, நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, கட்டியணைத்து தங்களது அன்பை பகிர்ந்து கொண்டது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதையை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தம் அடைந்தனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், அவர்களுடைய 86 வயது கணித ஆசிரியரான சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் டிஇஎல்சி பள்ளியின் புகைப்படம் கொண்ட கேடயங்கள் ஆசிரியர் கையால் வழங்கப்பட்டது.
அப்போது ஒவ்வொரு மாணவர்களும் ஆசிரியர்களும் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு பெற்றுச் சென்றனர். அதனைத்தொடர்ந்து ’’வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும்’’ என்ற பழைய பாடலை முன்னாள் மாணவர் ஒருவர் பாட, மற்ற மாணவர்கள் அந்தப் பாடலுக்கு ஏற்ப, நடனம் ஆடி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை சிறுவயதில் தங்கள் பள்ளியில் படித்த போது உணவருந்தியது போல், இன்றும் அருகருகே அமர்ந்து கொண்டு உணவருந்தி மகிழ்ந்தனர். மேலும் 56 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனி ஒவ்வொரு வருடமும் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தில் ஏற்பட்ட அன்பின் பரிமாற்றத்தில் அவர்கள் முகத்தில் புத்துணர்ச்சி மலர்ந்தது கண்கூடாகத் தெரிந்தது. பின்னர் அவர்களில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளரும் முன்னாள் மாணவருமான ராஜேந்திரன் ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பேட்டியில், 'முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 56 வருடங்களுக்குப் பிறகு எனது நண்பர்களை பார்த்தது பசுமையான நினைவாக இருந்தது.
தற்போது நாங்கள் ஒவ்வொருவரும் சிறப்பான ஒரு இடத்தில் ஒழுக்கமாகவும் மன நிறைவோடும் வாழ்வதற்கு, இருப்பதற்கு எங்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலே காரணமாகும். மேலும், எங்களது ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த தன்னம்பிக்கை, தைரியம், ஒழுக்கம் ஆகியவை எங்களை நல்வழிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், எங்களது சந்ததியினரையும் நல்வழிப்படுத்தி வருகிறது. இன்று ஒருவரை நான்கு வருடங்களுக்குப் பிறகு சந்தித்தால்கூட அடையாளம் தெரியாது. ஆனால், 56 வருடங்களுக்குப் பிறகு எனது நண்பர்களை சந்தித்தபோது, சிறுவயதில் உள்ள எங்களின் இளமைப்பருவம் ஞாபகம் வருகிறது’ என்றார்.
பின்னர் ஈடிவி பாரத் ஊடகத்திற்குப் பேட்டி அளித்த முன்னாள் மாணவர் ராமதாஸ், ''1967ம் ஆண்டு டிஇஎல்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 42 மாணவர்கள் ஒன்று கூடி உள்ளோம். அவர்களுக்கு புதுக்கோட்டை விக்டோரியா நினைவு வளைவு மற்றும் நாங்கள் படித்த டிஇஎல்சி பள்ளியின் எழில்மிகு தோற்றமடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
56 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது வரும் ஆண்டுகளிலும் தொடரும். மேலும் 70 வயதைக் கடந்தவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சியானது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளமைப் பருவத்தில் பார்த்துக்கொண்ட நாங்கள் 56 வருடங்களுக்குப்பிறகு, ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, மறுபிறப்பு போன்று எங்களுக்கு உள்ளது.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: Ambedkar Jayanthi : குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!