புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு 2,608 பயனாளிகளுக்கு ரூ.21 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறை 54 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகையுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று செயல்பட்டு வருகிறது.
இதன் பயனாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை 87 லட்சத்து 89 ஆயிரத்து 930 விவசாயிகளுக்கு 46 ஆயிரத்து 350 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் விவசாயிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க உத்தரவிட்டு, இதுவரை ஆறு லட்சத்து 31 ஆயிரத்து 308 விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து 550 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் 21 ஆயிரத்து 355 விவசாயிகளுக்கு 110 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பான செயல்பாட்டால் ஆண்டு வருமானவரி கட்டும் வகையில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இவரைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுவதன் மூலம் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், பயிர்கடன், மத்திய கால விவசாய கடன், சிறுவணிகக் கடன், டாம்கோ கடன் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தை பருவம் முதலே சிறுசேமிப்பின் அவசியத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கான 'வானவில்' சிறுசேமிப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய அதிமுக அரசு பல எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது என்றார்.