புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தின சபாபதி பார்வையிட்டார். அப்போது இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்திற்குத் தனது பாராட்டை தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது, "தற்போது அனைத்து விவசாயிகளும், இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருவதால், விவசாயிகளுக்கு அதிகளவில் பயன்பெறக்கூடிய விவசாயமாக மாறிவருகிறது. அதேபோன்று, தமிழ்நாடு அரசும் விவசாயிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயிகளுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்கி வருகிறார். அதேபோல் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் துவக்குவதற்கு நிதியை ஒதுக்கி பணிகளையும், தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் விவசாயத்தை அழித்து வரும் வெட்டுக்கிளியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் விவசாயத்தை அழிக்கும் வெட்டுக்கிளி வந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், அரசு வெட்டுக்கிளி அழிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது" என்றார்.
இந்த நிகழ்வின்போது, புதுக்கோட்டை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், வேளாண் அலுவலர்கள் சுபத்ரா, ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதப்பன், விஜயா, முதன்மை செயல் அலுவலர் அகிலா ஆகியோர் உடனிருந்தனர்.