புதுக்கோட்டை மாவட்ட அதிமுக தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக இருப்பவர் சுசீந்திரன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாள்தோறும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு தனது சொந்த செலவில் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சமூக விரோதிகளால் அவமரியாதை ஏற்பட்டு வருவதால், அதனைத் தடுக்கும் பொருட்டு, பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்றது.
அந்த வகையில், புதுக்கோட்டையிலுள்ள தலைவர்கள் சிலைக்கு உடனடியாக கூண்டுகள் அமைத்து, அதன் பராமரிப்புப் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் பொறுப்பு அந்தந்த நகராட்சி, பேரூராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கம் போல எம்ஜிஆர் சிலைக்கு இன்று (அக்.20) காலை மாலை அணிவிக்க வந்த சுசீந்திரன் கூண்டு அமைக்கப்பட்டு, எம்ஜிஆர் சிலை பூட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து, நகராட்சி அலுவலர்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்புகொண்டு சிலைக் கூண்டின் கதவைத் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்து வந்தார். ஆனால் அலுவலர்கள் அதற்கு செவி சாய்க்காத நிலையில், கூண்டின் கதவைத் திறக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தத் தகவலறிந்து விரைந்த காவல் துறையினர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, மாலை அணிவிக்க அனுமதியளித்தனர்.