புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இன்று( ஜூன் 23) திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களில் வருபவர்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனரா என்பதனை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சியர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து போர்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரிபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தவிர மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்களிலிருந்து வருகை புரிபவர்களை கண்டறிய கிராம நிர்வாக அலுவலர், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களை கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒவ்வொரு நாளும் புதிய நபர்கள் குறித்த விவரங்களை வழங்கிட அறிவுருத்தப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிபவர்கள் அதுகுறித்த தகவல்களை தாமாக முன்வந்து மாவட்ட ஆட்சியரக கட்டுபாட்டு அறையில் 24 மணிநேரமும் செயல்படும் 04322-222207 மற்றும் 1077 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறை எண்களான 04322-221733, 04371-220501 என்ற எண்களிலோ தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தகவல் தெரிவிக்காதவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின்போது மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் விதிகளை மீறியதாக 8 ஆயிரத்து 768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 15 ஆயிரத்து 884 நபர்கள் கைது செய்யப்பட்டும், 15 ஆயிரத்து 338 வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.
நோய் தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்று வாகன தணிக்கை செய்து விதிகளை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நோய் அறிகுறி உள்ளவர்கள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏதேனும் நோய் அறிகுறி இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கரோனா இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் அனைத்து தரப்பு மக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.