புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருபவர், அஞ்சனா ஸ்ரீ. இவர் படிப்பில் மட்டுமல்லாது, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம் போன்ற பல்வேறு கலைகளையும் கற்று வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும்" என அறிவித்திருந்தது.
இதன் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் மாணவர்களுக்கு நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, நடனம், மொழித்திறன், பேச்சுப்போட்டி, ஓவியம், கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் நுண்கலை பிரிவில் செதுக்கு சிற்பம் வடிவமைப்பில் கலந்து கொண்ட மாணவி அஞ்சனா ஸ்ரீ, பள்ளி, வட்டாரம், மாவட்டம் அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதியாக மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட மாணவி, திருவள்ளுவரின் முழு உருவத்தை மரத்தில் சிற்பமாக செதுக்கி முதல் பரிசை வென்றுள்ளார்.
இந்த நிலையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி அஞ்சனா ஸ்ரீக்கு அவருடன் பயிலும் மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து மாணவி அஞ்சனா ஸ்ரீ ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாவில் நுண்கலை பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
நான் மாநில அளவில் முதலிடம் பிடிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை, எனக்கு சிறு வயதிலிருந்தே மரச்சிற்பம் செதுக்குவதை கற்றுக் கொடுத்தார். அது தற்போது நடைபெற்ற கலைத் திருவிழாவில் முதலிடம் பிடிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது” என தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவியின் தந்தை முத்துக்குமார் அளித்த பேட்டியில், “பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா, எனது மகளின் திறமையை வெளிக்கொணர்வதற்கு காரணமாக அமைந்தது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார். இந்த இன்பமான நேரத்தில், சாதனை மாணவி அஞ்சனா ஸ்ரீக்கு ஈடிவி பாரத் செய்திகள் தமிழ்நாடு பிரிவு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மின்னணுவியல் பயிற்சி முகாம்