ஊரடங்கு உத்தரவின் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மது பிறியர்கள் தள்ளாடிவருகின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொண்ட சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி பகுதியில் எலுமிச்சை தோட்டத்திற்குள் வைத்து கள்ளத்தனமாக சாராயம் விற்றுவருவதாக ஆலங்குடி மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் லலிதா தலைமையிலான காவல் துறையினர் எலுமிச்சை தோட்டத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு 400 லிட்டர் சாராய ஊறல் இருப்பதைக் கண்டனர்.
பின்னர், சாராய ஊறலை அழித்த காவல் துறையினர், ஊறலை பதுக்கிவைத்த கருக்காக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த மணிவாசகம் என்பவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊறல் போட்டிருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்