புதுக்கோட்டை: ஆலங்குடி அருகேவுள்ள கத்தக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெயரவி வர்மா. இவர், ஆலங்குடி அருகேவுள்ள கோயிலூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று (பிப்.19) காலை வல்லத்திராகோட்டை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த விஏஓ ஜெயரவி வர்மாவின் சொகுசு காரை நிறுத்தி தனிப்படை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த சோதனையில் விஏஓ ஜெயாரவி வர்மாவின் காரில் இருந்து ஆயிரத்து 700 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விஏஓ ஜெயாரவி வர்மாவை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவருடன் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆட்டாங்குடியைச் சேர்ந்த முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் கணேசன், காரைக்குடியைச் சேர்ந்த சூர்யசந்திர பிரகாஷ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து கஞ்சா கடத்த பயன்படுத்திய விஏஓ சொகுசு கார், நான்கு செல்போன்கள், 1.700 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்த விஏஓ உட்பட மூன்று பேரையும் வல்லத்திராகோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் பெரிய அளவிலான கஞ்சா வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரே அவரது காரில் கஞ்சா கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்: அரசு அலுவலரை கண்டித்து போராட்டம்!