புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விராலி மலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருமயம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிகள் அதிக செலவினத் தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 54 பறக்கும் படைகள் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் சோதனை செய்து வருகின்றனர். இவர்கள் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மாவட்டத்தில் 125 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி ஊராட்சி அலுவலகத்தில் அரசால் வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலை, நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஊராட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின்னர் ஊராட்சி அலுவலகங்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.