புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பெரியகுரும்பப்பட்டியில் காயம்பு அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி பல்வேறு முன்னேற்பாடுகளோடு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
முன்னதாக, காளைகளையும் வீரர்களையும் மருத்துவக் குழுவினரும் பரிசோதனை செய்து களத்திற்குச் செல்ல அனுமதித்தனர். இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 1,000 காளைகளும், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 180 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். பெரும்பாலான காளைகளை வீரர்கள் அடக்க, சில காளைகள் மட்டும் வீரர்களைப் பந்தாடின. போட்டியின் முடிவில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பிளாஸ்டிக் சேர், குடம், பேன், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் வீரர்களான கார்த்திக் (22), சரவணக்குமார் (29), விஜயக்குமார் (27), பிரகாஷ் (23), தினேஷ்குமார் (26), ஜெயபிரகாஷ் (21), ரோகீத்ஜான் (15), கோபிநாத் (30) உள்பட 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். இவர்களில் ஐந்து பேர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: திமிரு இருந்தா மோதிப் பாரு திமிலை நீயும் தொட்டு பாரு...!