புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்த கீழக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு இன்று (மார்ச் 13) நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் பாண்டி, அரசு ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதன் பின்னர் மாடுபிடி வீரர்களை அன்னவாசல் மருத்துவர் கதிரேசன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து உள்ளே அனுப்பினர்.
ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் உறுதி மொழியுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போட்டியின் தொடக்கத்தில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
![15 injured in keelakurichi jallikattu in pudukottai district](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-03-jallikattu-image-scr-7204435_13032020195113_1303f_1584109273_227.jpg)
திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அன்னவாசல், சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்திருந்த 952 காளைகள் போட்டியில் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் 140 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
![15 injured in keelakurichi jallikattu in pudukottai district](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-03-jallikattu-image-scr-7204435_13032020195113_1303f_1584109273_585.jpg)
சீறிப் பாய்ந்த காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கார்த்திகேயன் (22), சிங்கமுத்து (26), மணி (23), ராஜா திருப்பதி (22), கோபி (22), வீரமணி (20) உள்பட மொத்தம் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மிக்சி, பிளாஸ்டிக் நாற்காலிகள், வெள்ளிப் பாத்திரம், வெள்ளி நாணயம், ரொக்கப்பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.