புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 108 கால் சென்டர் பணியாளர்களுக்கு பணி நியமான ஆணையினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதற்கான விழா மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் தலைமையில் நடந்தது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்ததாவது, விபத்து, பிரசவம் போன்ற அவசர காலங்களில் மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 108 சேவைக்கான கால் சென்டர் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
அதற்கு அடுத்தபடியாக, புதுக்கோட்டையில் 108 சேவைக்கான கால் சென்டர் தொடங்கப்பட உள்ளது. அதில் பணியாற்றும் 19 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது. கரோனா தொற்று காலத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களின் உயிர்காக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும், 1,005 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. நோய் தொற்று காலத்தின் தேவையை கருதி தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.103.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய 108 ஆம்புலன்ஸ் வாங்க உத்தரவிட்டுள்ளார். அதில், 130 புதிய ஆம்புலன்ஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 120 அதிநவீன ஆம்புலன்ஸ்களும் அடங்கும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 2.50 லட்சம் பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 450 அவசர ஊர்திகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
108 அவசர ஊர்தியினை அழைத்தவுடன் தங்களின் ஆன்ட்ராய்டு போனில் வாகனம் எவ்வளவு துாரத்தில் வருகிறது என அறியும் வகையிலான செயலிகள் இந்த சேவையில் அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னையில், விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடமாக இருந்தது, 10 நிமிடமாகவும், பின், 8.36 நிமிடமாக குறைக்கப்பட்டு, தற்போது, 8 நிமிடமாக அது செயல்படுகிறது. கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 14.5 நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மூன்று வாரங்களாகின்றது. பொதுமக்கள், முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் நோய் தடுப்பு அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து சுகாதார கட்டமைப்பு வசதிகளும், சி.டி ஸ்கேன், ஆக்ஸினேசன் வசதி, உயிர்காக்கும் மருந்துகளுடன் 15,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தான் ஒரு நாளைக்கு, 85 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தொற்று பாதித்தவர்கள் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, அரசின் சீரிய முயற்சியால் மாவட்டங்களின் நோய் பரவும் விகிதம் 10 சவீதமாக குறைக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இ-சஞ்சீவி திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் எண்ணிக்கைக்கு மேல் வீடியோ கால் மூலம் மருத்துவ ஆலோசனை பெற்ற மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக சென்னை ஓமந்தூரார் அரசு கரோனா மருத்துவமனை விருது பெற்றுள்ளது.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கரோனா தடுப்பூசி பரிசோதனை பணிகளில், தடுப்பூசியை போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களை அழைக்கும் பணி இந்த வாரம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளின் படி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா காலத்தில் 80 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதுடன், 75 முதல் 80 சதவீத பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொண்டுள்ளது.
கரோனா காலத்தில் மருத்துவப் பணியினை சேவையாக கருதி பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்கு உரிய கௌரவம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க :முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்