புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் குடிகாட்டிவயல் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து, இவருடைய மகள் வேம்பரசி. இன்று காலை வேம்பரசி, அவர்களது வயலில் உள்ள கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக தனது நண்பர்களோடு சென்றுள்ளார்.
100அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் வேம்பரசி மூச்சுத் திணறி கிணற்றுக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பெற்றோர் கிணற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இது குறித்த தகவல் அறிந்து கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் உடையாளிப்பட்டி காவல்துறையினர், கீரனூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி வேம்பரசியின் உடல் மூழ்கிய இடத்தை நவீன கேமரா கொண்டு தேடினர். தொடர்ந்து நான்கு மோட்டார்கள் கொண்டு கிணற்றிலிருந்து நீர் இறைக்கப்படது.
சம்பவ இடத்திற்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் விரைந்தனர். 4 மணி நேர போராட்டத்திற்கு, பின்னர் நவீன கேமரா உதவியுடன் சிறுமியின் உடல் இருக்கும் இடம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக, புதுக்கோட்டைக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி, மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு!