பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் மாணவி ஆன்லைன் வகுப்பு இல்லாத நேரத்தில், பிளாஸ்டிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே நவம்பர் 1ஆம் தேதி வேலைக்குச் சென்ற தனது மகள் காணவில்லை என மாணவியின் தாய் கமலா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிளாஸ்டிக் கடையில் வேலை செய்த திருச்சி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த சேர்ம ராஜா என்பவரை மாணவி காதலித்து வந்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி மாணவியை திருமணம் செய்வதாக கூறிய சேர்ம ராஜா, திருச்சியில் உள்ள சமயபுரம் அருகே அழைத்துச் சென்றதும் விசாரணையில் தெரிவந்தது.
இதனடிப்படையில் பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.