பனை மரம் தன்னுடைய குழல் போன்ற வேர்களால் மழைநீரை பூமிக்குள் செலுத்தி நீர்மட்டத்தை உயர்த்தும் அபார சக்தி கொண்டது. பனை மரத்தின் மூலம் கிடைக்கும் பனைவெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கிழங்கு உள்ளிட்டவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்ததாகும். நெகிழிக்கு மாற்றாக பனை ஓலைகளிலிருந்து நிறையப் பொருட்களைத் தயாரிக்கலாம்.
அதோடு மட்டுமில்லாமல் மண் அரிப்பைத் தடுத்தல், நீர் மட்டத்தை உயர்த்துதல் என பல்வேறு சூழலியல் பங்களிப்பையும் வழங்கிவரும் பனைமரம் நீர்வளத்தை காக்கும் நண்பனாய் திகழ்கிறது.
மனித உயிருக்கு இவ்வளவு நன்மைகள் பயக்கும் பனைமரங்கள் சில ஆண்டுகளுக்கு பல லட்சம் இருந்தன. ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது.
இந்நிலையில், பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தின் ஏரிக்கரையில் 'புதிய பயண நண்பர்கள்' என்ற இளைஞர்கள் குழு பனம் பழங்களை சேகரித்து நடவுசெய்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் பனை விதை நடவுசெய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.