பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சாத்தனூர் கிராமத்தில் உள்ளது பெரிய ஏரி. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஏரி சோழர் காலத்தில் வெட்டப்பட்டதாகவும், அதற்குச் சான்றாக, ஏரியில் உள்ள தூம்பு என்கிற துளை இன்றளவும் காட்சியளிக்கிறது. சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி, பாசன ஏரியாக விளங்கி வருகிறது. இந்த ஏரியில் உள்ள நீர் மூலம் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், பாசன வசதி பெற்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ரூ. 1 லட்சம் நிதி திரட்டி, ஏரியின் இருபக்கங்களிலும் உள்ள கருவேல முள் மரங்களை அகற்றினர்.
தண்ணீர் வருவதற்கான வரத்து வாய்க்கால் சரி செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் கரையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

தற்போது, சாத்தனூர் கிராம மக்களும், இளைஞர்களும் முழு முயற்சியோடு ஒன்றிணைந்து 1000 ஆண்டுகள் பழமையான ஏரியைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசு பழமையான இந்த ஏரிக்குக் கூடுதல் கவனம் செலுத்தி, மதகுகள் சரி செய்து கொடுத்தால், மிகவும் நன்றாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு