பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கோரையாறு கிராமத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் மலை மீது அமையப் பெற்றது கோரையாறு அருவி. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக இருப்பது பச்சைமலை, இது திருச்சி, சேலம் மாவட்டங்களை பசுமை போர்த்தியது போல காட்சி அளிப்பதாகவும், திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களை ஒன்றிணைக்கும் பசுமை பாலமாகவும் திகழ்கிறது. இந்த மலையின் தென்புற பகுதியில் மயிலூற்று அருவியும், மேற்கில் கோரையாறு அருவியும், மலையாளப்பட்டி அருகே ஒரு அருவியும், பூலாம்பாடி அருகே இரட்டைப் புறா அருவியும் குதூகலத்தை அதிகரிக்கச் செய்யும் குற்றால அருவி போல திகழ்கின்றன.
கனமழை பெய்தால் மட்டுமே மற்ற அருவிகளில் தண்ணீர் கொட்டும், ஆனால் சாதாரண மழை பெய்தால் கூட கொட்டித் தீர்க்கின்ற கோரையாறு அருவி என்றால் எல்லோருக்கும் கொள்ளைப் பிரியமாக இருக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டுகின்ற இந்த அருவியைக் காண அக்டோபர் மாதத்துக்கு பிறகுதான் சீசன் ஆரம்பிக்கிறது. உற்பத்தியாகும் அருவியின் நீர் எல்லா ஓடைகளிலும் உருண்டு புரண்டு ஓடி வந்து கலக்கிறது, இறுதியாக கடலூர் மாவட்டத்தின் வழியாக கடலுக்குள் சென்று கலக்கிறது.
மேலும் 30 அடி உயரத்தில் இருந்து மூலிகை சாறுகள் கலந்தபடி மூர்க்கத்தனமாக கொட்டுகின்ற அருவியை முதியவரும் பெண்களும் செல்வது முடியாத நிலைதான், இந்த ஒரு காரணத்தினாலேயே கோரையாறு அருவி சுற்றுலாத்தல அந்தஸ்தை இழக்கிறது. பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் வழியாக தொண்டமாந்துறை சென்று, அங்கிருந்து விஜயபுரம் ஐயர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கோரையாறு கிராமத்திற்குச் செல்ல வேண்டும். ஒரு கிராமம் வரை அரசுப் பேருந்து செல்கிறது, மேலும் பாதைகளின் சிரமம் பார்க்காமல் பச்சைமலை மீது நடந்து சென்றால் சுமார் 2 மணிநேரம் கரடு முரடான பாதைகளை கடந்தால் அருவியை சென்று பார்க்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இந்த அருவிக்கு சரியான வழித்தடம் இல்லாததால் இளசுகளுக்கு மட்டும் ஏற்ற அருவியாக இது விளங்குகிறது.