சென்னை கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், அண்மையில் சரக்கு வாகனங்களின் மூலம் அவரவர் கிராமங்களுக்கு வந்தடைந்தனர்.
இதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு பகுதியிலிருந்து பெரம்பலூர் திரும்பிய தொழிலாளர்களை பெரம்பலூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நேற்று முடிவெடுத்தது.
இந்த செய்தி பசும்பலூர் கிராம மக்களுக்குத் தெரியவர, மாவட்ட நிர்வாகத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய், விஷ மருந்து பாட்டில்களுடன் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களை அரசுப் பள்ளியில் தங்க வைத்தால் தீக்குளித்தோ, விஷமருந்து குடித்தோ தற்கொலை செய்துகொள்ளுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்துபோக வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 31 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அதி தீவிரக் கரோனா தாக்கத்தில் சென்னை - திரு.வி.க. நகரில் மட்டும் 324 பேர் பாதிப்பு!