பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து நகராட்சி ஆணையர் குமரி மன்னன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் அனுமதியற்ற முறையில் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து செய்திக் குறிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "கோடைகால தொடக்கத்தின் காரணமாக பெரம்பலூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ள காரணத்தினாலும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் விலைக்கு வாங்கி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், நகரப்பகுதிகளில் நகராட்சியின் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் இணைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற்று வருவதாக நகராட்சியில் புகார் வந்ததாகவும், அதனடிப்படையில் நகர்ப்பகுதிகளில் அனுமதியின்றி பெறப்பட்ட குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் அனுமதியின்றி குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் பெற்றிருப்பின், மூன்று தினங்களுக்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து கட்டணங்களைச் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும், அது தவறும்பட்சத்தில் கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இந்த ஆய்வில் நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத்தின் மனிதாபிமானமற்ற அரசு - உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காட்டம்