பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டை வெற்றி மாநாடாக நீங்கள் மாற்றிக்காட்டிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மதுரையில் அண்மையில் கேலிக்கூத்தான ஒரு மாநாடு நடைபெற்றது. அதே சமயம் நாம் மக்களின் மிக முக்கிய பிரச்சனையான நீட் தேர்வுக்காக அறப்போராட்டம் நடத்தினோம். நீட் தேர்வுக்கு எதிராக போராட ஒரு உதயநிதி போதாது. நீங்கள் அனைவரும் உதயநிதி போல் செயல்பட வேண்டும்.
தமிழக மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு அற்புதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் மத்தியில் ஆளும், 9 ஆண்டுகால பாஜக அரசால் வாழ்ந்தது அதானி எனும் ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான். அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையில் மத்திய பாஜக அரசு சாலை அமைத்தல், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்களில் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டப் பேரவைத் தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தது போல 2024 ஆம் ஆண்டு அவர்களின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும். மேலும் இந்தியா எனும் நமது வீட்டில் பாஜக என்ற விஷப்பாம்பு நுழையாமல் இருக்க வீட்டை சுற்றியுள்ள அதிமுக என்ற குப்பைகளை அகற்றிட வேண்டும். எனவே அதற்கு முன்னோட்டமாக சேலம் மாநாட்டுக்கு வருகை தந்து இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசின் நீட் நுழைவு தேர்வால் இதுவரை தமிழ்நாட்டில் 21 மாணவ மாணவிகள் பலியாகி உள்ளனர், இந்நிலையில் தற்போது கடந்த இரண்டு வாரத்திற்கு முன் நீட் மாணவனின் தந்தையும் பலியாகி உள்ளது வருத்தம் அளிக்கிறது. ஆனால் எதிர்கட்சியாக உள்ள அதிமுக நீட்டை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பொறாமையால் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு.. பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!