ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பாக, உலகப் பொதுமறை திருக்குறளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கான அழைப்பை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்திக் குறிப்பில், ''உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வி அறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் "திருக்குறள் முற்றோதுதல் பாராட்டு பரிசு திட்டம்'' நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்யும் 70 மாணவ - மாணவிகளுக்கு தலா ரூ 10 ஆயிரம் பரிசாக தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2020-21ஆம் ஆண்டுக்கான இத்திட்டத்தின் கீழ், 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். குறள் எண், இயல் எண், அதிகாரம் எண் ஆகியவற்றை கூறினால் திருக்குறளை கூறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவ - மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே போட்டியில் பரிசு பெற்றால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகள் பள்ளியில் பயின்று வருவதற்கான தலைமை ஆசிரியரிடம் சான்று ஒப்பம் பெற்று வர வேண்டும். இந்தப் போட்டிக்கான விண்ணப்பத்தினை பெரம்பலூர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்'' என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'மாநில வருவாய் பாதித்தாலும் கவலையில்லை; மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்'