பெரம்பலூர்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று (மே28) ஆய்வு செய்தார். தொடர்ந்து, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ’பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதிகள் தேவையான அளவு உள்ளன. கூடுதல் தேவைகள் ஏற்படுமானால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் சிறப்பாகவே வழங்கப்படுகின்றன.
கறுப்பு பூஞ்சை தொற்று
கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்த உண்மை தகவல்களை வெளியிடுவதில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வித தடையும் இல்லை. பெரம்பலூரில் இதுவரை கறுப்பு பூஞ்சை தொற்று பதிவாகவில்லை. வெளிமாவட்டங்களில் சிகிச்சை பெறும் பெரம்பலூரைச் சேர்ந்த சிலருக்கு அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. அன்னமங்கலம் கிராமத்தில் அதிக அளவிலான தொற்று பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.