பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கல்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 46 பேர் கடந்த மார்ச் 16ஆம் தேதி காசி யாத்திரைக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் மார்ச் 23ஆம் தேதி வீடு திரும்புவதாக இருந்தது. ஆனால் மார்ச் 21ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், காசி யாத்திரைக்கு சென்ற 46 பேருக்கு அங்கேயே பரிசோதனை செய்யப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.
அதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் அவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லம்மாள் என்ற ஒரு பெண் மட்டும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் முடிவுகள் வந்ததால் மீண்டும் 14 நாள்கள் திருவள்ளூர் மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே கடந்த மே ஒன்றாம் தேதி, காசி யாத்திரைக்கு சென்ற அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவுகள் வந்ததால் அவர்கள் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானதால், அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 14 நாள்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே தாங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறை மற்றும் பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!