உலகையே அச்சுறுத்திவரும் கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்தவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மலையப்ப நகர் கிராமத்தில் சுமார் 130 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பாசிமணி கோர்ப்பது, பாசிமணிகளால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கால் சமய வழிபாட்டுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், இவர்கள் தொழில் செய்யமுடியாமலும், பொருளீட்ட முடியாமலும் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பா உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டாலும், அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் ரூ. 1000 கிடைத்தாலும் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை என கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, தங்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி கூடுதல் நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: உணவு, மின்சாரமின்றி தவிக்கும் கிராம மக்கள்!