பெரம்பலூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 14 ஏரிகள் புணரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் உள்ள ஏரியானது ரூ 29 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 110.78 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி புணரமைக்கப்படுவதன் மூலம் 13. 60 மி.கன அடி தண்ணீர் சேமிக்க முடியும்.
இந்நிலையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 4 கி.மீ தூரம் வரத்து வாய்க்கால் தூர் வாரப்பட்டு, 1, 586 மீ கரை பலப்படுத்தும் பணியும், 40 மீ பாசன வாய்க்கால் ஆழப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகின்றது.
இந்த பணியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.