பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (டிச.17) நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார். இதையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து 24 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 19 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆயிரத்து 614 பயனாளிகளுக்கு 23 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இதன் பின்னர், சிறு, குறு, நடுத்தர, தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்தாய்வு நடத்தவுள்ளார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பாலக்கரை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சருக்கு பதாகைகளை வைத்து, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பொழுதுபோக்கு, மதக் கூட்டங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் அறிவிப்பு