தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருடன் இணைந்து நேற்று (ஆகஸ்ட் 10) பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு தடுப்பூசி போடும் பணியைத் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து பேரளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து மாத்திரைகளை வழங்கி இத்திட்டத்தின் பயன் குறித்து விவரித்தார்.
தொடர்ந்து பேரளி கிராமத்தில் தனியார் (தனலட்சுமி சீனிவாசன்) மருத்துவக் கல்லூரி பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி உதவியின் மூலம் பொதுமக்களுக்கான இலவச தடுப்பூசி முகாமினைத் தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு அறுவை சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை நேரில் சென்று ஆய்வுசெய்து நோயாளிகள், நோயாளிகளின் உடனிருந்த உறவினர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறைசார்ந்த அலுவலர்களுடனான கரோனா தொற்று பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், "பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள வார் சென்டர்கள் மூலம் துரித சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத் துறையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
நிகழ்வுகளின்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு: 127ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்!