இந்த ஆண்டு கோடை காலத்தின்போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் தமிழ்நாட்டின் பல்வேறு ஏரிகள், கண்மாய்கள் என அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டு போனது. இதனால் பொதுமக்கள் அன்றாட பயன்பாட்டிற்கும் தண்ணீரின்றி பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீருக்காக பொதுமக்கள் போராடும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை சரி செய்வதற்கு முதன்முறையாக ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மழைக் காலம் வரவுள்ளதையொட்டி மழை நீரை சேமிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பெரம்பலூர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நகராட்சி ஆணையர் ராதா கொடியசைத்து தொடங்கி வைக்க, முக்கிய சாலைகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமான அலுவலர்களும், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.