விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் ஆற்றுப்பாசனமோ, ஏரிப்பாசனமோ கிடையாது. மழையை நம்பியே மானாவரி சாகுபடி செய்யப்படுகிறது. இதனிடையே கடந்த சில வருடங்களாக பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தினால் விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.
செயற்கையாய் வயலுக்கு எவ்வளவு நீர் பாய்ச்சினாலும், மழை பெய்யாவிட்டால் விவசாயத்தை செழிக்க வைக்க முடியாது.
தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டி பல்வேறு இடங்களில் யாக பூஜைகள் நடந்தாலும் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராம மக்கள் சற்று வித்தியாசமான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
இங்கு கோடை காலத்தில் தொடர்ந்து 30 நாட்கள் ”பொன்னர் சங்கர்” தெருக்கூத்து நாடகம் நடைபெறுகிறது. இக்காலத்தில் கூத்து நடத்தினால் மழை பெய்யும் என்பது அம்மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது. அதன்படி 30 நாட்கள் பொன்னர் சங்கர் கதையினை கூத்தாக இரவு 8 மணி முதல் 12 மணி வரை நடத்திவருகின்றனர். பொன்னர் சங்கர் கதையோடு மழை பெய்ய வேண்டி அதிகளவிலான புராண பாடல்கள் இடம்பெறுகின்றன. அதுமட்டுமின்றி மக்கள் கும்மியடித்தும் வழிபாடு செய்கின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தாண்டி இந்த கூத்தை காண்பதற்கு ஏராளமான மக்கள் கூடுகின்றனர்.