பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள், இயற்கை உபாதையைக் கழிக்க பொது இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தினர் சிலர், பட்டியலின மாணவர்களை மலம் அள்ள சொல்லி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களது வீட்டில் நடந்த சம்பவத்தை கூறியதால் இந்த விசயம் வேகமாய் பரவியது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களை மலம் அள்ள வைத்த நபர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக காவல்துறை நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பெரிய போராட்டம் நடக்கும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை: ஆதிக்க சமூகத்தினருக்கு துணை போகும் வருவாய்த்துறை