பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக தன்னிச்சையான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது, கரோனா வைரஸால் இறந்த மின்வாரிய தொழிலாளிக்கும் இதர துறைகளுக்கு வழங்கியது போல் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இடுக துணை மின் நிலையங்களை குத்தகை மற்றும் அவுட்சோர்சிங் என்ற நவீன பெயரால் தனியார்மயமாக்கக்கூடாது, வேலைப்பளு ஒப்பந்தம் படி அனுமதிக்கப்பட்ட பதவிகள் ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும்.
கரோனா வைரஸ் காலத்தில் பணிக்கு வர முடியாத நாட்களுக்கு அரசாணை 304இன் படி சிறப்பு விடுப்பு அளித்திட வேண்டும், ரத்து செய்த சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் பங்கேற்றனர்.