பெரம்பலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் மாணவர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயில், 600 பானைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட காளை மாடு வரவேற்போடு நிகழ்வு தொடங்கப்பட்டு, மாட்டு வண்டியில் ஊர்வலம் நடைபெற்றது. அதில் லண்டன் நகரைச் சார்ந்த ஷெரோன், பீட்டர், எவிலினா உள்ளிட்ட வெளிநாட்டினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் பொங்கல் வைத்து இவ்விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
மேலும் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், விருந்தோம்பல் ஆகியவற்றை கண்டு வியந்ததாகவும், மகிழ்ச்சியடைந்ததாகவும் வெளிநாட்டினர் தெரிவித்தனர். அதனிடையே, மாணவர்களோடு இணைந்து நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மாணவர்கள் இந்த நிகழ்ச்சியின் வரவேற்பில் மாட்டுவண்டி ஊர்வலம், பரதம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நடனம் ஆடி அனைவரையும் வியக்க வைத்தனர்.
இந்த திருவிழாவில், உழவர்களின் உற்ற தோழனாய் விளங்கும் கால்நடைகளை வணங்கும் வகையில் மாட்டுப்பொங்கல், சாதி, மதம் கடந்து மனித சமுதாயம் சமத்துவத்துடன் வாழ வலியுறுத்தும் சமத்துவ பொங்கல், மொழி, இனம், நாடு கடந்து அனைவரும் சகோதரர்களாக வாழ வலியுறுத்தும் சகோதரத்துத்துவப் பொங்கல்,
இயற்கை, விவசாயம் மற்றும் சிறுதானியங்களின் நற்பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியப் பொங்கல், பூமியில் அனைத்து விதமான உரியினங்களும் வாழ சக்தியளிக்கும் பிரபஞ்சத்தின் முதன்மைகோளான சூரியனின் ஆற்றலை வணங்கும் வகையில் சூரியப் பொங்கல், சுற்றுச் சூழலை பாதுகாக்க, மரபுசாரா எரிசக்தியின் பயன்பாடுகளை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைப் பொங்கல் ஆகிய தலைப்புகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும், இந்த விழாவில் விவசாயத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தமிழர்களின் பெருமையின் அடையாளங்களான மாட்டு வண்டி ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளைகள், சேவல், ஆடுகள் மாணவர்களின் பார்வைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அதனிடையே சட்டி உடைத்தல், கரும்பு உடைத்தல், கோலப்போட்டி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.