பெரம்பலுார் ஆயுதப்படை தலைமைக் காவலராக பணிபுரிந்துவருபவர் ரவிச்சந்திரன். இவர் ஏற்கனவே பணி நேரத்தில் குடிபோதையில் இருந்ததால் பணிநீக்கம், பணியிலிருந்து விடுப்பு போன்ற தண்டனைக்குள்ளானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பணியில் சேர்ந்து, குன்னம் காவல் நிலையில் பணிபுரிந்துவந்தார். அங்கும் பணியினை சரிவர செய்யாததால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், ஆயுதப்படை தலைமைக் காவலராக பணிபுரிந்துவரும் ரவிச்சந்திரன் நேற்று (மார்ச் 10) இரவு குடிபோதையில் பணியில் ஈடுபட்டுள்ளாதாகத் தெரிகிறது. போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய அவர் நடக்கமுடியாமல் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஒரு கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டு அதை கையில் பிடித்தபடி கடை முன்பு அமர்ந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இதனைப்பார்த்த பொதுமக்கள் நாட்டை பாதுகாக்கும் காவலரே பணியின்போது குடிபோதையில் இப்படி செய்கிறாரே என வேதனை தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரவிச்சந்திரனை காவல் துறை வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.