பெரம்பலூர் மாவட்டத்தில் ஆனந்த் ஜுவல்லரி என்னும் பெயரில் நகைக்கடை நடத்திவருபவர் கருப்பண்ணன். இவருக்கு பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகேயுள்ள சர்ச் சாலையில் வீடு உள்ளது. இவர் கடந்த 26ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்து வீட்டிற்குள் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
பின்னர் பீரோவில் இருந்த 105 சவரன் தங்க நகை, 9 கிலோ வெள்ளிப் பொருள்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துவிட்டு, வீட்டு வாசலில் நின்றிருந்த கருப்பண்ணனின் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி, ஆலம்பாடி சாலையில் கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற கார் அநாதையாக நிற்பதையறிந்த காவல் துறையினர், அதனைக் கைப்பற்றி விசாரணை நடத்திவந்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த அரும்பாவூர் இளங்கோ நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
குற்றவாளிகள் கைது
அப்போது அவருடன் நின்றுகொண்டிருந்த இரண்டு பேர் தப்பியோடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் ஆனந்த் ஜுவல்லரி உரிமையாளர் வீட்டில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்றவர்களில் திருச்சியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை மட்டும் கைதுசெய்த காவல் துறையினர், ராஜ்குமாரைத் தேடிவருகின்றனர்.
மேலும் செந்தில்குமார், ஆனந்தன் ஆகியோருடன் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருள்களை மறைத்துவைத்திருந்த குற்றத்திற்காக செந்தில்குமாரின் மனைவி கவிமஞ்சு, தாய் ராஜேஸ்வரி ஆகியோரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்