பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன். இவருக்கு நேற்று (ஜன.3) இரவு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சளி இருமல் மற்றும் லேசான காய்ச்சலுடன் இருந்து வந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் நேற்றிரவு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் திருச்சி தனியார்(கே.எம்.சி) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அவருடன் பணியாற்றிய அவரது உதவியாளர் உள்பட 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 10 தினங்களுக்கு மேலாகச் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் தனக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினரும், தோழமைக் கட்சியினரும் அவருடன் பங்கேற்றனர். மேலும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
குறிப்பாக நேற்று (ஜன.3) காலை 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வினை, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியாவுடன் கலந்துகொண்டார்.
மேலும் அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரனுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் பணியாற்றிய, நேற்றைய நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் கல்வித்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அலுவலர்களும் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனையடுத்து, அவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா.. ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி!