இது குறித்து அவர் கூறியதாவது; "தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு சித்தா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு சளி, வறட்டு இருமல், உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல், நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தங்களை தகுந்த பரிசோதனை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் கரோனா நோயை எளிதாக குணப்படுத்தி உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்பதால் சிகிச்சைக்கு முன்வராமல் தன்னிச்சையாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கித் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் வைரஸ் நோய் தாக்கத்தின் தீவிரம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தாமாக முன்வந்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற முன்வர வேண்டும். மேலும், தங்கள் வீட்டில் முதியோர்கள் நீரழிவு நோய் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களில் நடமாடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.