பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்ன கோணம் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து என்பவரின் மகன் காமராஜ். பிறந்ததிலிருந்து ஏழு வயது வரை எழுந்து நடக்க முடியாமல் இருந்த இவர், வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று சற்று நடக்கத் தொடங்கினர். ஐந்தாம் வகுப்பு வரை அவரது தாய் இவரை தூக்கிக்கொண்டு சென்று பள்ளியில் படிக்க வைத்தார். தொடர்ந்து ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை இவரது கிராமத்திற்கு அருகிலுள்ள லப்பைக்குடிகாடு கிராமத்தில் தனது மூன்று சக்கர வண்டியில் சென்று பயின்றுள்ளார்.
பத்தாம் வகுப்பில் 403 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 1007 மதிப்பெண்கள் பெற்றும் சாதனை படைத்தார். தொடர்ந்து கல்லூரி பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பிகாம் பட்டப்படிப்பு படித்து முடித்தார். இவரது கிராமத்திலிருந்து இவர் பயின்ற கல்லூரிக்கு 50 கி.மீ தொலைவு இருந்தாலும் மனம் தளராமல் விடாமுயற்சியோடு கல்லூரி படிப்பை முடித்தார்.
ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற சிறுவயது கணவை அடையும் எண்ணத்தில் எம்காம், எம்பிஎல் படிப்பையும் இவர் வெற்றிகரமாக முடித்தார். திருச்சியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் வங்கி பணிக்காக படித்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐபிபிஎஸ் (IBPS) பிரிலிமினரி தேர்வில் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இந்தியன் வங்கியில் பணியாற்றுவதற்கு தேர்வாகியுள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக பணி நியமன ஆணை மட்டும் இன்னும் பெறவில்லை.
தனது சாதனைப்பயணம் குறித்து பேசிய அவர், "நான் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல் இல்லாமல் ஒன்றரை கிலோ எடையோடு பிறந்தேன். தற்போது, தன்னம்பிக்கையோடு பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து தற்போது வங்கிப்பணிக்கு தேர்வாகியுள்ளேன். இளம் வயதில் என்னை கேலி செய்தவர்கள் இன்று பாராட்டுகிறார்கள்.
எந்த ஒரு சூழலிலும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் சாதிக்கமுடியும். நான் பலமுறை நடக்கமுடியாமல் கீழே விழுந்து அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மனதளவில் தொடர்ந்து நம்பிக்கையை வளர்த்துக்கொண்டே இருந்தேன். அதனால்தான் தற்போது என்னால் வங்கித்தேர்வில் வெற்றி பெற்றிருக்கமுடிகிறது" என்றார்.
பிறக்கும்போது குறைபாட்டுடன் எனது மகன் பிறந்ததால், இவன் தெய்வக்குழந்தையாக இவ்வுலகில் வளம் வரவேண்டும் என்ற நம்பிக்கையோடு கஷ்டமான சூழலிலும் அவனை ஊக்குவித்து வளர்த்துவந்தோம் என்று பெருமை பொங்க கூறுகிறார் காமராஜின் தந்தை பழனிமுத்து. விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றிபெறமுடியும், அதற்கு மற்ற எதுவும் தடையாய் இருக்காது என்பதற்கு காமராஜே உதாரணம்.
இதையும் படிங்க: நீட் தேர்வு 2020: மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி