பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "தோட்டக்கலைத் துறையின் மூலமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. காய்கறிப் பயிர்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு ஹெக்டேருக்கு 3 ஆயிரத்து 750 ரூபாயும், கீரை வகைகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதுதவிர இயற்கை விவசாய சான்று பெறுவதற்கு 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் தனியாகவோ அல்லது விவசாய குழுக்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறுவதுடன் நல்ல லாபம் ஈட்ட முடியும். ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் பெறலாம்' என்றார்.
மேலும், இதர விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை நேரடியாக சந்திக்கலாம். இது தவிர, ஆலத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (8838448116) கைப்பேசி எண்ணிலும்,பெரம்பலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் (9786377886), வேப்பந்தட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (6379246587), வேப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (6383062564) ஆகியோரது கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.