பெரம்பலூர் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் குன்னம் பகுதியைச் சேர்ந்த சரவணன். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் பகல் முழுவதும் வசூலான தொகை ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் பணத்தை டாஸ்மாக் விற்பனையாளர் ஆறுமுகம் எடுத்துக்கொண்டு, இரவு 8 மணி வரை வசூலான தொகை ரூ.72 ஆயிரத்து 50 பணத்தை சரி பார்த்துவிட்டு சூப்பர்வைசரிடம் கொடுக்குமாறு கூறி பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சூப்பர்வைசரிடம் கொடுப்பதற்காக ரூ.72 ஆயிரத்து 50 பணத்தை எடுத்துக்கொண்டு பச்சமுத்து தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது, அந்தூர் - குன்னம் சாலையில் தனியார் கோழிப்பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிளகாய் பொடியை அவர் முகத்தில் தூவிவிட்டுள்ளனர்.
இதில் கண் எரிச்சசால் கீழே விழுந்த அவரிடம் இருந்த பணத்தையும், இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றனர்.
இதனையடுத்து பணத்தை பறிகொடுத்த பச்சமுத்து சூப்பர்வைசர் சரவணனுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அதன் பின்னர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பணத்தையும், இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை!