விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
வானம் பார்த்த பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில், மழையை நம்பியே பெருவாரியான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயத்தில் ஏற்படும் தொடர் நஷ்டம் காரணமாக பரம்பரை விவசாயிகளே விவசாயத்திலிருந்து விலகிவரும் இக்காலத்தில், தற்சார்பு விவசாயத்தில் அசத்திவருகின்றனர் பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் இருவர்.
பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அருண், பிரகாஷ். பொறியியல் பட்டதாரிகளான இவர்கள், சிறுவயதிலிருந்தே விவசாயம் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பேச்சுகள் இவர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இவர்களின் தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமத்தில் தவித்துள்ளனர். அதன் பிறகு சகோதரர்கள் இருவரும் அவர்களின் நிலத்தில் தற்சார்பு வேளாண்மை முறையில் விவசாயம் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, தங்கள் நிலத்தில் தற்சார்பு வேளாண்மையில் ஈடுபட்டு பப்பாளி, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, வாழை உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான பயிர்களை விளைவிக்கின்றனர். பயிரிடும் பயிர்களுக்கு ’தாவரப் போர்வை’ என்று சொல்லப்படுகின்ற தாவரக் கழிவுகள் மூடாக்கு அமைக்கின்றனர். மூடாக்கு அமைப்பதன் மூலம் களை எடுப்பது எளிதாகிறது, பூச்சிகள் அண்டாமலும் பாதுகாக்க முடியும். அதுமட்டுமில்லாமல் குறைவான அளவிலேயே நீரைப் பயன்படுத்தி, சிறப்பான முறையில் விவசாயப் பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.
வியாபார நோக்கத்திற்காக மட்டும் அல்லாமல், நஞ்சில்லா உணவை அனைவரும் உண்ண வேண்டும் என்ற கொள்கைக்காக, இயற்கையான முறையில் விவசாயம் செய்து மற்ற இளைஞர்களுக்கு சகோதரர்கள் இருவரும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
இதையும் படிங்க:விவசாயிகளின் வாழ்வில் கசப்பைத் தந்த பாகற்காய் - கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!