தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 139 பேர் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டு, அரியலூர், சென்னை, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில், சிகிச்சை பெற்று வந்த 138 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த, கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணும் சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து நேற்று (மே 28) மாலை வீடு திரும்பினார்.
இதனால் பெரம்பலூர் மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக மாறியதைத் தொடர்ந்து, சிகப்பு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்திற்கு அம்மாவட்டம் மாறவுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, மாவட்டம் முழுவதும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 11 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இருவேறு இடங்களில் சந்தேகமான முறையில் இருவர் உயிரிழப்பு!