ஆந்திராவிலிருந்து வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது. இந்தக் காரை, பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச் சாவடியில், மதுரை காவல்துறையினர் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவல் துறையினரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவர்களை லாவகமாகப் பிடித்த காவல் துறையினர், பெரம்பலூர் மங்கலமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் மதுரையைச் சேர்ந்த முனியசாமி, முருகன் என்றும், இவர்கள் கஞ்சா வியாபாரிகள் என்றும் தெரியவந்தது.
இருவரிடமிருந்து 180 கிலோ கஞ்சாவையும், அவர்கள் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களில் முனியசாமி மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், அவர் மீது மக்களவைத் தேர்தலின்போது, மதுரையில் எம்.எஸ். பாண்டி என்ற வழக்கறிஞரை, கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று, பிணையில் வந்தது தெரியவந்தது.
தற்போது, முனியசாமி கஞ்சா கடத்தல் தொழில் செய்துவருகிறார் என்றும், முழுமையான விசாரணைக்குப் பிறகு அனைத்து விவரங்களும் தெரியவரும் என டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.