பெரம்பலூர்: கடந்த சில நாள்களாக, பெரம்பலூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பெருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதனால் அவ்வப்போது மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 9) பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாரியம்மன் கோவில் அருகே மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் இருந்து, 175 டெட்டனேட்டர்கள் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதனை கைபற்றிய காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மகேந்திரனின் மகன் கோபிநாத் என்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான அதே கவுல்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வேலை செய்து வருவதாகவும், அங்கு பாறைகளை தகர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள கெட்ட டெட்டனேட்டர்களை எடுத்து வந்து கடையில் வைத்திருந்ததாகவும் தெரியவந்தது.
இருப்பினும் 75 ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மகேந்திரன் மற்றும் கோபிநாத் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: அதிமுக பிரமுகர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு