தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவும், டிசம்பர் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெய்க்குப்பை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்திலும், பச்சையம்மாள் என்பவர் ஆட்டோ சின்னத்திலும் தேர்தலில் போட்டியிட்டனர்.
நெய்க்குப்பை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மொத்தம் இரண்டாயிரத்து 445 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஆயிரத்து 166 வாக்குகள் விஜயலட்சுமி என்பவர் பெற்றிருந்தார். ஆயிரத்து 169 வாக்குகள் பச்சையம்மாள் என்பவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் பச்சையம்மாள் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பச்சையம்மாள் வாக்கிற்கு ஒரு கிராம் தங்கம் என டோக்கன் வினியோகித்து வெற்றி பெற்றதாகவும், இந்த வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தக்கோரி விஜயலட்சுமி, அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? - கமலாலயத்தில் தீவிர ஆலோசனை