பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தின் திறப்பு விழா நேற்று(ஜூலை 4) நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
பெரம்பலூர் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி,குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், புறநோயாளிகள் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதாராணி, அதிமுக பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் செல்வகுமார், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.