பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு, தருண் (13) என்ற மகனும், தனுஷ்கா (6) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் சவுதியில் வேலை செய்து வருவதால், பிரியா மற்றும் அவரது குழந்தைகள் மணிகண்டனின் தாயார் வீட்டில் வசித்து வந்தனர்.
இதனிடையே கடந்த மூன்று நாள்களாக பிரியாவும், அவரது பெண் குழந்தை தனுஷ்காவும் காணாமல் போயுள்ளனர். மூன்று நாள்களாகக் காணவில்லை என்பதால், மணிகண்டனின் தாயார் அவர்களது உறவினர் வீடுகளில் பிரியாவை தேடி அலைந்துள்ளார்.
இந்நிலையில், பூலாம்பாடி கிராமத்திலுள்ள ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் சடலமாக மிதப்பதாக அரும்பாவூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கிணற்றில் மிதந்த சடலங்களைத் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு மீட்டனர்.
மேலும், உயிரிழந்தவர்கள் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போன பிரியா மற்றும் அவரது மகள் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரியாவும் அவரது மகளும் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டார்களா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.